மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன் என விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, மும்பையில் ஊர்வலம் நடைபெற்றது.
ரே ரோடு பகுதியில் உள்ள ரஹ்மதாபாத் மயானத்துக்கு அருகில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு, ஒருவர் மாத்திரையை விநியோகித்துள்ளார்.
குறிப்பாக, கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த மாத்திரைகளை வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் என்று கூறி அவர் கொடுத்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த ஒரு பெண் பொலிசாரிடம் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற பொலிஸார் மாத்திரைகளை விநியோகித்த பயாஸ் பிரேம்ஜி என்பவரை கைது செய்தனர்.
அவரை பொலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, இந்த மாத்திரைகளை உட்கொண்ட 11 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளனர்.
இந்த மாத்திரையை உட்கொண்ட சல்மான் சையத் என்பவருக்கு கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயந்த் மீனா கூறும்போது, “புகாரின் பேரில் மாத்திரைகளை விநியோகித்த பயாஸை பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 14,900 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். அந்த மாத்திரைகளில் எலி விஷம் மற்றும் பிற பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் ‘ஜின்க் பாஸ்பைடு’ என்ற மிக ஆபத்தான வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த நபர் 30,000 வெற்று கேப்சூல்களையும், 50 கிலோ பாஸ்பரஸையும் ஆர்டர் செய்திருந்தது தெரிய வந்துள்ளது.
ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதே தனது நோக்கம் என்று விசாரணையின்போது பயாஸ் ஒப்புக்கொண்டார்.
பிபிஏ பட்டதாரியான இந்த நபர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, அவர் இதற்கு முன்பு ஈரான் மற்றும் இராக் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
இதையடுத்து, பயாஸ் மீது பைகுல்லா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 123-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சதியின் பின்னணியில் ஏதேனும் தீவிரவாதத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.















