பிரித்தானியாவில் வீடு கட்டுமானத் துறையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானத் துறை முன்னணி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கட்டுமான நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இணைந்து, “பிரித்தானியாவின் கட்டுமான நடவடிக்கைகளை மீண்டும் வேகப்படுத்த வேண்டும்” என்ற தேசிய அளவிலான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. இதன் மூலம், கட்டுமானத் துறையை காப்பாற்ற அவசரகால நடவடிக்கைத் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்கள் விநியோக நிறுவனமான Jewson நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால் அல்ல; தற்போது எதிர்கொள்ளும் அவசரநிலை. கட்டுமானத் துறை பிரித்தானிய பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பின் மையமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் வீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை உருவாக்குவதில் கட்டுமானத் துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஆனால் தற்போது பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை விரும்பினால், நாட்டை நேரடியாக கட்டியெழுப்பும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் வீடு கட்டும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் துறை கடும் நெருக்கடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வீடுகள் கட்டும் இலக்குகளை அடைவதற்கு அரசு உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என கட்டுமானத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















