எல்பிட்டிய பகுதியில் கைது செய்யப்படவிருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கஹடுவப் பகுதிக்குச் சோதனை நடத்தச் சென்றிருந்தபோது, சந்தேக நபர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், பொலிஸார் வானத்தை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர் இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்; இரண்டு அதிகாரிகள் அவர்களைத் துரத்திச் சென்றனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு இருந்த சந்தேக நபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் ஒரு பொலிஸ் அதிகாரியை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.
இதனால், சந்தேக நபர்களில் ஒருவரின் கையில் குண்டு பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்களுக்கு உள்ளான சந்தேக நபர் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார்; ஆனால், பின்னர் மற்றொரு குழுவினர் வந்து அவரை அழைத்துச் சென்றனர்.
குறிப்பிட்ட நபர் கொலைக்கு உடந்தையாக இருந்தது உட்படப் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.














