இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு (FIU), நிதி பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டத்தின் விதிமுறைகளை மீறிய 11 நிறுவனங்களுக்கு மொத்தமாக 1 கோடியே 46 இலட்சம் ரூபாய் (14.6 மில்லியன் ரூபாய்) அபராதம் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரை இடம்பெற்ற இணக்கமின்மைகள் தொடர்பிலேயே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்க்கும் (AML/CFT) ஒழுங்குபடுத்தும் அமைப்பாகச் செயல்படும் FIU, சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) பிரிவுகளின் கீழ் இந்த நிர்வாக அபராதங்களை விதித்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்திலும் கண்டறியப்பட்ட இணக்கமின்மையின் தன்மை மற்றும் அதன் தீவிரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டதாக FIU தெரிவித்துள்ளது.
அபராதமாக வசூலிக்கப்பட்ட அனைத்து நிதியும் அரசின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு (Consolidated Fund) வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
அறிக்கையிடல் நிறுவனங்களின் சட்ட இணக்கப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்குமான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அமுலாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.













