கடந்த 23ஆம் திகதி காலை நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விபத்து இடம்பெறும் காட்சிகள் அடங்கிய CCTV பதிவு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த காரொன்றில் பொருத்தப்பட்டிருந்த டாஷ்போர்ட் CCTV கமராவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.
கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதியதையடுத்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேருந்தில் சிக்கியுள்ளார்.
பேருந்து அவர் மீது கவிழ்ந்து விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் பெண் ஒருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று (24) சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதையடுத்து, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதியை இன்று (25) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.













