காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது.
இதில் பல வழக்கமான வீரர்கள் இடம்பெறாத நிலையில், முக்கிய வீரர்களின் உடற்தகுதி குறித்த சந்தேகங்களும் நீடிக்கின்றன.
சுப்மன் கில் அணியை வழிநடத்துவார்.
கே.எல். ராகுல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், அணியில் ஏற்கனவே தங்களை நிலைநிறுத்திக்கொண்ட வீரர்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தடம் பதிக்க விரும்பும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இருப்பினும், காயங்கள் காரணமாக இந்தியாவின் வழக்கமான சில வீரர்கள் இத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.
தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலக்கப்பட்ட நிதிஷ் ரெட்டி அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
அதேவேளையில், நான்கு மாத கால காய ஓய்வுக்குப் பின்னர் போட்டிக்கு திரும்பிய சில நாட்களிலேயே ஹர்ஷித் ரானாவும் விலக நேரிட்டுள்ளது.
அதேநேரம், சாய் சுதர்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் பங்கேற்பு குறித்தும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.
இவர்கள் இருவரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவ சிறப்பு மையத்தின் உடற்தகுதிச் சான்றிதழ் பெறுவதைப் பொறுத்தே இவர்களின் பங்கேற்பு அமையும்.
இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வில் வொஷிங்டன் சுந்தர் இடம்பிடிக்கவில்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 15-ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 27-ஆம் திகதி நிறைவடைகிறது.
முதல் போட்டி காலியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பிலும் நடைபெறவுள்ளன.
இத்தொடருக்கு முன்னதாக, ஆகஸ்ட் 7-ஆம் திகதி முதல் கொழும்பில் நான்கு நாள் பயிற்சிப் போட்டியிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
















