இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மற்றும் தற்போதைய ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படாத பல ஜனாதிபதி மாளிகைகளை, சுற்றுலாத் துறையில் முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட ஓய்வுக்காகப் பராமரிக்கப்படும் இந்த மாளிகைகள், தற்போது ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மேலும், அவற்றின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பிற செலவினங்களுக்காக கணிசமான அளவு பொது நிதி செலவிடப்பட வேண்டியிருந்தது.
முழுமையான வசதிகள் மற்றும் மிக உயர்ந்த கட்டடக்கலை மற்றும் பொருளாதார மதிப்புடைய கவர்ச்சிகரமான நில அமைப்புகளைக் கொண்ட இந்த மாளிகைகளை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்களாக்கள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாகப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்த நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெந்தோட்ட, கதிர்க்கமம் , மஹியங்கன, எம்பிலிப்பிட்டிய, அனுராதபுரம் ஆகிய
பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டங்கள் தகுதியான முதலீட்டாளர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட உள்ளன:
இந்த முன்மொழிவு ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.












