ஹபரானை, ஹுருலு சூழலியல் பூங்கா காப்பகத்தில் இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வேட்டைக்காரர்களே இத்தீயை வைத்துள்ளதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
தீ பரவியதை அடுத்து, வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஹபரானைப் பொலிஸார் இணைந்து தீவிர பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.
இத்தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக ஹபரானைப் பொலிஸாரும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இருப்பினும், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.














