இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாத மின்சாரக் கம்பி வடங்களை (Cables) விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக, அனுராதபுர நகரிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் 11-ஆம் வீதியில் அமைந்துள்ள குறித்த கடையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே இந்தச் சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
மின் சாதனங்களுக்கான SLS தரநிலைகளைப் பின்பற்றுவது நுகர்வோரின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது எனவும், தரமற்ற மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மின்கசிவு, மின் அதிர்ச்சி மற்றும் ஆபத்தான தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் மின்சாரக் கம்பி வடங்கள் மற்றும் மின் சாதனங்களைக் கொள்முதல் செய்யும்போது SLS தரச்சான்றிதழ் முத்திரை மற்றும் உற்பத்தி விபரங்களைச் சரிபார்த்து வாங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், சந்தையில் தரம் குறைந்த அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தகவல் தெரிந்தால், ‘1977’ என்ற நுகர்வோர் அவசர உதவி இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.













