பமுனுகம கடற்கரையில் நீரில் மூழ்கி பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர்.
பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவில் இருந்த பெண்ணொருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று (30) மாலை பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன பெண் 35 வயதுடையவர் எனவும், காணாமல் போன இரண்டு சிறுமிகள் 4 மற்றும் 12 வயதுடையவர்கள் எனவும், சிறுவன் 13 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் அனைவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீரில் மூழ்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இலங்கை கடற்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













