சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தலைமையில் ஹக்கல தாவரவியல் பூங்காவில் விசேட கள விஜயமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பல முக்கிய அபிவிருத்தி யோசனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஹக்கல பிரதேசத்திற்கு உரித்தான விசேட தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காக விசேட மையமொன்றையும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அடிப்படை ஆய்வகமொன்றையும் (Basic Laboratory) நிறுவுவதற்கும், அதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கும் முதற்கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய நடைபாதைகள் (Walking Trails) மற்றும் சிறிய பாதைகள் அடங்கிய புதிய சூழலியல் வலயமொன்றை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாளங்காணப்பட்ட அரிய மற்றும் உரித்தான தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காகப் பசுமைக்குடில்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அத்தாவர மற்றும் விலங்கு இனங்கள் பற்றிய தகவல்களைக் கற்றறிவதற்குப் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
இயற்கைச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இயற்கையின் அமைதியை அனுபவித்துச் சுதந்திரமாக நேரத்தைக் கழிக்கக்கூடிய ‘பூஜ்ய உமிழ்வு’ (Zero Emission) வலயமொன்றாக இந்த வளாகத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இயற்கைச் சூழலமைப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், மலையகப் பல்லுயிர் பெருக்கத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.














