ஈரான் மீதான அண்மைய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், போரினால் ஏற்படும் பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் மீது மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் முழுவதும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 108 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 67 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய செம்பிறை சங்கம் (Iranian Red Crescent) தெரிவித்தது.
பஹ்ரைன், ஜோர்டான், குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் என்று தான் குறிப்பிட்டவற்றின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் மத்தியில் போர் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை (03) அதிகாலையில் மேலும் சில ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாதபோதிலும், ஜூலை மாதத்தில் நடைபெற்ற மோதலுக்குப் பின்னர் துப்பாக்கிச் சத்தங்கள் பெரும்பாலும் ஓய்ந்திருந்தன.
உள்நாட்டில் போருக்கு எதிர்ப்பு நிலவுவதுடன் அது பெட்ரோல் விலையையும் உயர்த்தியிருந்த போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் அதிக இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதாக அச்சுறுத்தினார்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினருக்கு ஏற்படக்கூடிய தேர்தல் தோல்விகளைத் தவிர்க்கும் வகையில், அதற்கு முன்னதாகப் போர் தீவிரமடைவதைத் தடுக்க ட்ரம்ப்பின் முக்கிய உதவியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அதேவேளையில், நவம்பர் 3-ஆம் திகதி நடைபெறும் தேர்தலுக்குப் பின்னர் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்று இது தொடர்பில் அறிந்த நான்கு பேர் தெரிவித்தனர்.
ஈரானைப் பொறுத்தவரை, கடுமையான இராணுவ மற்றும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்த போதிலும், அது தனது பிடிவாதமான நிலைப்பாட்டிலேயே நீடிக்கிறது.
















