புது டெல்லியில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் செப்டம்பர் 12 அன்று இருதரப்புச் சந்திப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்பது, ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் இந்தியப் பயணமாக அமையும்.
எல்லைப் பதற்றங்களால் ஏற்பட்ட நீண்டகால விரிசலுக்குப் பின்னர், டெல்லியும் பெய்ஜிங்கும் தங்கள் உறவுகளைச் சீரமைக்க முயற்சித்து வரும் சூழலில் சீன ஜனாதிபதியின் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பல ஆண்டுகால இராணுவப் பதற்றம், இராஜதந்திரப் பிரிவு மற்றும் இறுக்கமான பொருளாதார ஈடுபாடு ஆகியவற்றுக்குப் பின்னர், இந்தியாவும் சீனாவும் தங்களது உறவுகளில் ஒரு எச்சரிக்கையான தளர்வை வலுப்படுத்த முயல்வதால், முன்மொழியப்பட்ட இந்த சந்திப்பு உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
அத்துடன், 2020-ல் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் பயணமும் இதுவேயாகும்.
இருப்பினும், திட்டமிடப்பட்டுள்ள இருதரப்புச் சந்திப்பு குறித்து புது டெல்லியும் பெய்ஜிங்கும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் அந்த இரு தலைவர்களும் அண்மையில் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது அவர்கள் கைகுலுக்கிக்கொண்ட போதிலும், முறையான இருதரப்புச் சந்திப்பு எதையும் நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.















