சீனாவிற்குச் செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த நடவடிக்கை, தங்கள் குடிமக்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வெளிநாட்டில் இருக்கும்போது சீனாவின் தேசியப் பாதுகாப்பு அல்லது நலன்களுக்கு “தீங்கிழைத்ததாகக்” கருதப்படும் குடிமக்கள், நாடு திரும்பிய பிறகு மூன்று ஆண்டுகள் வரை சீனாவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்படலாம்.
அதேபோல, தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கும் வெளியேறுவதற்கான தடை விதிக்கப்படலாம்.
இவ்விதிகள் “தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காகவே” என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இவை “சாதாரண குடிமக்களின்” பயணத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை அவர்கள் மறுக்கின்றனர்.
ஆனால், வெளிநாடுகளில் உள்ள தங்கள் நாட்டு மக்களின் செயல்பாடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் பெய்ஜிங்கின் திறனை, இந்த புதிய விதிகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தொழில்துறை அல்லது தொழில்நுட்பப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அல்லது தொழில்நுட்ப இறக்குமதி-ஏற்றுமதி விதிமுறைகளின் மீறல்களைக் குறிவைப்பதாகக் கூறி, சீனா ஜூலை மாதத்தில் புதிய விதிமுறைகளை வெளியிட்டது.
நாட்டின் பாதுகாப்பு அல்லது நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் சட்டவிரோத அல்லது குற்றவியல் செயல்களில் ஈடுபட்டுவிட்டு சீனா திரும்பும் குடிமக்கள் மீது, ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை விதிக்க இந்த விதிமுறைகள் வகை செய்கின்றன.
விசா விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளிக்கும் வெளிநாட்டினருக்கு, ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இரகசியத் தகவல்களை அணுகக்கூடிய உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் மீது, தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீண்ட காலமாகவே அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















