ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகவும், செங்கடல் ஒட்டிய யேமனின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் தங்கள் நிலைகளை வலுப்படுத்தி வருவதாகவும் யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளையில், அவர்களின் மின்னல் வேக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து ரியாத்தில் அவசர ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.
இதற்கிடையில், வளைகுடா அரபு நாடுகள் ஈரானுடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்ததால், மத்திய கிழக்கு மோதல் மேலும் பரவி உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.
யேமனில் சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தெற்கு சவவுதி அரேபியாவின் கமிஸ் முஷைத் நகரில் உள்ள இராணுவ விமானத் தளத்தைக் குறிவைத்து, விமானக் கொட்டகைகள், ரேடார் அமைப்புகள், ஓடுபாதைகள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகளைத் தாக்க, டஜன் கணக்கான ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தியதாக ஹவுத்திகள் திங்களன்று தெரிவித்தனர்.
சவுதி அதிகாரிகள் அங்குள்ள மற்றும் தெற்கே உள்ள ஏனைய மூன்று நகரங்களில் அவசரக்கால எச்சரிக்கைகளை விடுத்தனர்.
யேமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதல்களில் பதின்மூன்று பொதுமக்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடலின் நுழைவாயிலில் உள்ள பெரிம் தீவைக் கைப்பற்றியது உள்ளிட்ட ஹவுத்தி அமைப்பினரின் அண்மைக்கால முன்னேற்றங்கள், சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை முடக்கிய வியாழக்கிழமை வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர், அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் குழாய் வழித்தடத் தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களே காரணம் என்று ரியாத் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான்-ஈராக் போரின் காரணமாக ஹார்முஸ் நீரிணைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த 1980-களில், அதனைத் தவிர்ப்பதற்காக சவுதி அரேபியா வளைகுடாப் பகுதியிலிருந்து செங்கடல் வரை தனது நிலப்பரப்பின் ஊடாக 1,200 கிலோமீட்டர் (745 மைல்) நீளமுள்ள குழாய் வழித்தடத்தை அமைத்தது.
சவுதி எண்ணெய் குழாய்ப் பாதையின் செயல்பாடு நீண்ட காலத்திற்கு முடக்கப்பட்டால், அது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% வரை பாதிக்கக்கூடும் என்றும், அதேவேளையில் அந்த நீரிணைப் பகுதி பெருமளவில் முடக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
செயல்பாடுகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து ரியாத் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப் பதிலடியாக, சவுதி மற்றும் யேமன் நாட்டு விமானப் படைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கடல் துறைமுகமான ‘மோச்சா’ (Mocha) உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹவுத்தி இலக்குகள் மீதான வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இருப்பினும், செங்கடலை ஒட்டியுள்ள நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதி முழுவதிலும் ஹவுத்திகள் தங்கள் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறான பின்னணியில் திங்களன்று (14) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் 4%-க்கும் அதிகமாக உயர்ந்தன.
பின்னர், சுமார் 1% உயர்வுடன் நிலைபெற்றன.
தலையிடத் தயங்கும் அமெரிக்கா
மீண்டும் தலைதூக்கியுள்ள யேமன் மோதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு மற்றொரு சவாலாக அமைந்துள்ளது.
உளவுத்துறை ஆதரவைத் தாண்டி, நேரடி இராணுவத் தலையீட்டிற்கான சவுதி கோரிக்கைகளை வொஷிங்டன் இதுவரை எதிர்த்து வருவதாக மூன்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வார இறுதியில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடன் பேசியதாகவும், இந்த மோதலில் இருந்து விலகி இருக்குமாறு வொஷிங்டனை வலியுறுத்தி ஹவுத்திகள் தொடர்பு கொண்டதாகவும் ட்ரம்ப் கூறினார்.
பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான், திங்களன்று ஜெட்டாவில் அமெரிக்க பிராந்திய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரை சந்தித்ததாக சவுதி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2015-ஆம் ஆண்டு முதல் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணியை சவுதி அரேபியா வழிநடத்தி வருகிறது.
இருப்பினும், அண்மைக்காலமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அங்கு மோதல்கள் பெரும்பாலும் தணிந்திருந்தன.
இந்நிலையில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் படைகளை ஹவுத்திகள் பின்வாங்கச் செய்துள்ளதால், இம்மாதம் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன.
இராஜதந்திர முயற்சிகளுக்கான நம்பிக்கை மழுங்களில்
போருக்கு முன்பு உலகின் 20 சதவீத எண்ணெய் ஏற்றுமதிக்கு வழிவகுத்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடனான ஒரு கூட்டத்தை ஓமன் திங்களன்று நடத்தவிருந்தது.
ஆனால், அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஓமன் அறிவித்தது.
சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
ஈரான் விரைவில் ஒரு ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளது என்ற தனது வழக்கமான கூற்றை ட்ரம்ப் திங்களன்று மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி, ஜனாதிபதியின் இந்தச் செய்தி ஒரு கவனச்சிதறல் என்று கூறி, “ஈரானின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை” என்று அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
இப்பகுதி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தின் நிலையற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், ஒரு எண்ணெய் கப்பல் எப்படி, எப்போது சேதமடைந்தது என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் பரவின.
ஹார்முஸ் நீரிணைக்குத் தெற்கே உள்ள தடைசெய்யப்பட்ட பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, பனாமா கொடியுடன் கூடிய ‘எல் கையா’ (El Gaia) என்ற எண்ணெய் கப்பல் கடல் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் படைப்பிரிவு (Revolutionary Guard Corps) கூறியதாக ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்தது.
ஆனால், அந்தத் தகவல் தவறானது என்றும், அக் கப்பல் கடந்த மாதமே ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகிச் செயலிழந்துவிட்டதாகவும் அமெரிக்க இராணுவத்தின் மத்தியக் கட்டளைப் பிரிவு (Central Command) உடனடியாகத் தெரிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO), ‘எல் கையா’ கப்பல் சனிக்கிழமையன்று சேதமடைந்ததாகத் தெரிவித்தது.
ஆனால் அது எவ்வாறு சேதமடைந்தது என்பதைக் குறிப்பிடாத அந்த அமைப்பு, கப்பலில் இருந்த இரு மாலுமிகள் காணாமல் போனதாகவும் கூறியது.
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதை பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், தங்கள் அனுமதியின்றி அப்பாதையில் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் அச்சுறுத்தல் விடுத்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.













