பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (10) கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இப்போராட்டம் நடைபெறவுள்ளதாக அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இருப்பினும், நாளை வைத்தியசாலை அமைப்பில் எந்தவித பணிப்புறக்கணிப்பும் இடம்பெறாது எனவும், அனைத்து வைத்தியர்களையும் கொழும்புக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி இதற்கான தீர்வுகளை வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க:
“நாளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் அனைத்து மாவட்டக் கிளைச் சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகளைக் கொழும்புக்கு அழைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் நாளை கொழும்புக்கு வரத் தயாராகியுள்ளனர்.
அரசாங்கத்திடம் நாங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறோம், எச்சரிக்கையும் விடுக்கிறோம். வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தையே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இலவச சுகாதார சேவை, நாட்டின் வைத்தியசாலை அமைப்பு, வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்குச் சரியான தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறுமானால், இந்த நாட்டிற்கு இலவச சுகாதார சேவை தேவையில்லை, வைத்தியர்களோ விசேட வைத்தியர்களோ தேவையில்லை என்ற செய்தியையே அரசாங்கம் சொல்வதாக அமையும்.
நாளை நாங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டோம். அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும்.
அந்தச் சேவைகள் இடம்பெறும் அதேவேளை, ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் கொழும்புக்கு வரத் தயாராக உள்ளனர். இது முதலாவது கட்ட நடவடிக்கை மட்டுமே.
அடுத்த 48 மணித்தியாலங்கள் முடிவடையும் போது வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் அவதானிப்போம். இரண்டரை வருடங்களாக நாங்கள் பொறுமைகாத்தோம். எமது சம்பளம் வெட்டப்பட்டது, கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டன, பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்தன, உத்தியோகபூர்வ இல்லப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
பாதுகாப்பைக் கேட்டபோது சமூக ஊடகப் படைகளைப் பயன்படுத்தி வைத்தியர்கள் மீது சேறுபூசும் தாக்குதல்களை நடத்தினார்கள். அதன் விளைவை அனுராதபுரத்தில் மீண்டும் காண்கிறோம்.
எனவே, இந்தப் பயணத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வைத்தியர்கள் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த 72 மணித்தியாலங்கள் முடிவடைந்து, தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது எமது பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.
















