அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் (Starship) விண்கலம், சுமார் 22 மணிநேரம் விண்வெளியில் பயணித்த பின்னர் சனிக்கிழமை (4) மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ளது.
குறிப்பாக, விண்கலம் ஏவப்பட்ட டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஏவுதளக் கோபுரத்திற்கே மீண்டும் வந்து, அங்குள்ள பிரம்மாண்டமான இயந்திரக் கரங்களால் முதன்முறையாகப் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட்டை உருவாக்கும் பத்தாண்டுகால முயற்சியில் இந்தச் சாதனை மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
விண்கலத்தை மீண்டும் ஏவுதளத்திலேயே பிடிக்கும் இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் ரொக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கும், விண்வெளிப் பயணச் செலவுகளைக் குறைப்பதற்கும் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 171 அடி (52 மீற்றர்) உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் விண்கலம், டெக்சாஸில் அமைந்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்தின் மீது காணப்பட்ட அடர்த்தியான மேகங்களைக் கடந்து கீழிறங்கியது.
இதன்போது, விண்கலம் தனது இயந்திரங்களை மீண்டும் இயக்கி, செங்குத்தான நிலைக்கு மாறி, மெதுவாக ஏவுதளக் கோபுரத்திலுள்ள ‘மெகஸில்லா’ (Mechazilla) எனப்படும் பிரம்மாண்டமான இயந்திரக் கரங்களுக்குள் இறங்கியது.
அதன் இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்தப் பிடிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியபோது ஏற்பட்ட கடுமையான வெப்பத்தினால் விண்கலத்தின் வெளிப்புறம் கருகியிருந்தது.
எனினும், இயந்திரங்கள் நிறுத்தப்பட்ட பின்னர் விண்கலம் எவ்வித அசைவுமின்றி கோபுரத்தின் இயந்திரக் கரங்களில் தொங்கியபடி நிலைநிறுத்தப்பட்டது.
இது ஸ்டார்ஷிப் அமைப்பின் இதுவரையான மிக நீண்ட விண்வெளிப் பயணமாகும்.
இந்தச் சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பணித்திட்ட அறிவிப்பாளர் டான் ஹூட் (Dan Huot), விண்கலத்தை ஏவுதளத்திலேயே பிடித்த இந்த நடவடிக்கையை, விண்வெளிப் பயணத்தின் மிக முக்கியமான இலக்காகவும், இதுவரை விடுபட்டிருந்த முக்கிய இணைப்பாகவும் வர்ணித்தார்.
இரண்டு நிலைகளைக் கொண்ட இந்தப் பிரம்மாண்ட ரொக்கெட்டின் கீழ்ப்பகுதியான ‘சூப்பர் ஹெவி’ (Super Heavy) பூஸ்டர், வெள்ளிக்கிழமை டெக்சாஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து ஸ்டார்ஷிப் விண்கலத்தை விண்வெளிக்குக் கொண்டு சென்றது.
எனினும், ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பின்னர் அந்தப் பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்திற்குக் கொண்டுவரும் முயற்சி தோல்வியடைந்தது.
இதனால், ரொக்கெட்டின் இரு பகுதிகளையும் ஒரே முயற்சியில் மீட்டெடுக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டம் கைகூடவில்லை.
இருப்பினும், பூமியை 14 முறை சுற்றி, 22.5 மணிநேரப் பயணத்தை நிறைவு செய்த ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மேற்பகுதி வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியமை, பல பில்லியன் டொலர் செலவில் முன்னெடுக்கப்படும் ஸ்டார்ஷிப் திட்டத்தின் முக்கிய பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இந்த விண்கலம் முக்கிய பங்காற்றும் என அதன் நிறுவனர் எலான் மஸ்க் எதிர்பார்க்கிறார்.
குறிப்பாக, நிறுவனத்தின் முக்கிய வருமான ஆதாரமான ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் வலையமைப்பை விரிவுபடுத்துதல், விண்வெளியில் தரவு மையங்களை அமைத்தல், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புதல் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றங்களை உருவாக்குதல் உள்ளிட்ட இலக்குகளுக்கு ஸ்டார்ஷிப் பயன்படுத்தப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 260 கிலோமீற்றர் உயரத்தில் பூமியைச் சுற்றிக்கொண்டிருந்தபோது, 26 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய ஸ்டார்ஷிப், சனிக்கிழமை பசிபிக் பெருங்கடலுக்கு மேலாக கிழக்கு நோக்கிப் பயணித்தபடி வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தது.
இதற்காக அதன் இயந்திரங்களில் ஒன்று இயக்கப்பட்டது.
மணிக்கு சுமார் 17,000 மைல் (27,360 கிலோமீற்றர்) வேகத்தில் பயணித்த விண்கலம், தெற்கு டெக்சாஸின் மெக்சிகோ வளைகுடா கடற்கரைக்கு மேலாக வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோது கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டது.
இதன்போது, விண்கலத்தின் காற்றியக்கவியல் இறக்கைகள் மடிக்கப்பட்ட நிலையில், அதன் மேற்பகுதிக்கு அருகிலிருந்த இரண்டு சிறிய இணைப்புப் பகுதிகள் ஏவுதளக் கோபுரத்தின் இயந்திரக் கரங்களில் சிக்கின.
இதன்மூலம், தரையிலிருந்து சில நூறு அடி உயரத்தில் விண்கலம் பாதுகாப்பாகத் தொங்கவிடப்பட்டது.
விண்கலம் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குள்ளேயே எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பொறியியலாளர்கள் அதனை ஆய்வு செய்யும் பணிகளை ஆரம்பித்தனர்.
இதுகுறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில், ‘ஷிப் 42 சிறப்பாக உள்ளது!’ எனப் பதிவிட்டு, ஏவுதளக் கோபுரத்தில் பிடிக்கப்பட்ட விண்கலத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் பகிர்ந்துள்ளார்.















