– த.ரஸ்மிலா
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இன்றையதினம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் உணவுப் பொருள் வர்த்தகத் தடைகளைத் தளர்த்துதல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.
இதற்கமைய, இரு தரப்பு நாடுகளின் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் வரை ஏனைய தரப்பின் நாடுகளில் வேலை செய்யவும் கல்வி கற்கவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான உத்தேச எண்ணிக்கை ஒரு இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விவசாய மற்றும் உணவுப் பொருட்களின் எல்லை தாண்டிய வர்த்தக நடைமுறைகளை எளிதாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களால் பிரித்தானியப் பொருளாதாரத்துக்கு ஆண்டுக்கு 5.1 பில்லியன் பவுண்ஸ் வரை வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பல்கலைக்கழகக் கட்டணம் மற்றும் வர்த்தகக் கொள்கைகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் முக்கிய முயற்சியாக இந்த உச்சிமாநாடு கருதப்படுகிறது.















