உக்ரைனின் கிரிமியா பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற விவாதத்தின்போது பிரித்தானியாவின் பிரதிநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரிமியாவில், உக்ரைன் மற்றும் கிரிமியன் டாடர் மக்களின் அடிப்படை உரிமைகள், மொழி, மதம் மற்றும் கலாசார அடையாளங்கள் பாதிக்கப்படுவதாக பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேநேரம் சட்டவிரோதக் கைதுகள், சித்திரவதைகள், கட்டாயக் காணாமல் ஆக்குதல் மற்றும் உக்ரைன் சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சுதந்திரமான சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்குமாறும், தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் குறித்த தகவல்களை வழங்குமாறும் ரஷ்யாவிடம் பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.
பலவந்தமாகப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதைச் சட்டப்பூர்வமாக்க முடியாது என்றும், உக்ரைனின் இறையாண்மையைப் பாதுகாப்பது சர்வதேச சமூகத்தின் பொறுப்பு என்றும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

















