உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை?
உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார்.
கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
”இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது. அந்த அணி, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தபின், அதில் இருந்து திரும்பி அபாரமான ஆட்டத்தை நான்கு வருடங்களாக வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து மிகச்சிறந்த அணி. அவர்கள் அதிக அளவில் நம்பிக்கையை பெற்றுள்ளனர். சமீபகாலமாக அவர்களது விளையாட்டை பார்த்தீர்கள் என்றால், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில உலகக் கிண்ண தொடரை பார்த்தீர்கள் என்றால், தொடரை நடத்திய நாடுதான் கிண்ணத்தை வென்றுள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் ஏதும் நடக்கலாம். இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ள அதேநேரத்தில், மற்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகள் உலகக் கிண்ண தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம். இந்தத் தொடர் மிகமிக சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் மோத வேண்டும்” என கூறினார்.
எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் பெரும்பாலும் இங்கிலாந்து அணியே சம்பியன் பட்டம் வெல்லும் என்பது பலரினதும் கருத்தாகவுள்ளது. அதேவேளை இங்கிலாந்து அணிக்கு இந்தியாவும் அவுஸ்ரேலியாவும் கடும் சவாலாக திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும்.
இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.