ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் எனவும் சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும் எனவும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படா விட்டால், மீண்டும் வரிசை யுகம் உருவாகும் எனவும், எனவே, மலையக மக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை , ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு வரிசை யுகத்துக்கு முடிவுகட்டியதோடு, பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்ததாகவும் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்துவருவதோடு பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளதாகவும் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும் எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டை ஆள வேண்டியது கட்டாய தேவையாகும் எனவும் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவரின் தலைமைத்துவம் இருந்தால் இந்நாடு முன்னேறும் எனவும் சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோற்றால் அது தனிமனிதனுக்குரிய தோல்வியாக அல்லாமல் நாட்டின் தோல்வியாக அமையும் எனவும் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.