சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ் நாடு அணி, இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மகுடத்திற்கான இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பரோடா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சோலன்கி 49 ஓட்டங்களையும் ஷெத் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு அணியின் பந்துவீச்சில், மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும் அப்ராஜித், சோனு யாதவ் மற்றும் மொஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தமிழ்நாடு அணி, 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதன்மூலம் 2020-21ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ணத்தை தமிழ்நாடு அணி வென்றது. இது அந்த அணியின் இரண்டாவது சம்பியன் கிண்ணமாகும். இதற்கு முன்னதாக 2006-7ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரில் தமிழ்நாடு அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரி நிசாந்த் 35 ஓட்டங்களையும் பாபா அப்ராஜித் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பரோடா அணியின் பந்துவீச்சில், அடிட் ஷெத், லுக்மான் மெரிவலா மற்றும் பாபாசபீ பதான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, தமிழ்நாடு அணி சார்பில், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மணிமாறன் சித்தார்த் தெரிவுசெய்யப்பட்டார்.