உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு இராணுவத் தளபதி அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
எனது கடந்தவாரக் கட்டுரை ஒன்றில் எழுதியது போல கிழமைக்கு ஒரு பிரச்சினையைக் கிளப்பி தமிழ் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் சமூகங்களின் கவனத்தை அரசாங்கம் திசை திருப்பி வருகிறது. இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில்கூட எங்காவது ஒரு மரபுரிமை சின்னம் அல்லது சைவ ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் பார்வைக்குள் வந்திருக்கலாம்.
ராஜபக்ஷக்களின் இரண்டாவது வருகைக்குப் பின்னர் சிங்கள் பௌத்த மயமாக்கல் இப்படித்தான் முன்னெடுக்கப்படுகிறது. இதுவிடயத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பு அரசாங்கத்துக்கு நோகக் கூடியவைகளாக அல்லது அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடியவைகளாக இல்லை.
கடந்த மூன்றாம் திகதியில் இருந்து வடக்கு கிழக்கு சிவில் சமூகம் என்ற ஓர் அமைப்பு, கவனயீர்ப்பு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கிறது.
பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரை என்ற பெயரிலான இக்கவனயீர்ப்பு நடவடிக்கை எந்த அளவுக்கு அரசாங்கத்தின் கவனத்தையும் வெளி உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கக்கூடும் என்பதனை அதன்விளைவுகளை வைத்தே மதிப்பிடலாம்.
தொடக்கத்தில் மிகக் குறைந்த தொகையினர் அதில் பங்குபற்றினார்கள். ஆனால், அடுத்தநாளில் அதிக தொகையினர் இணைந்திருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம் கிராமங்களில் நாலாயிரத்துக்கும் குறையாதவர்கள் பேரணியில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
நில ஆக்கிரமிப்பைப் பொறுத்து தமிழ் மக்கள் மூன்று தளங்களில் போராட வேண்டியிருக்கிறது. முதலாவது, நாட்டுக்குள் இரு முனைப் போராட்டங்களை நடத்தவேண்டும். அதில், முதலாவது புதிய அகிம்சை வழியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும். அரசாங்கத்தாலோ அல்லது வெளி உலகத்தாலோ நிராகரிக்கப்பட முடியாத அளவுக்கு போராட்டங்கள் சக்தி மிக்கவைகளாக அமையவேண்டும்.
இரண்டாவது, சட்டரீதியான நடவடிக்கைகள். நில ஆக்கிரமிப்பு எனப்படுவது அரசாங்கம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்களின் பிரகாரமே முன்னெடுக்கப்படுகிறது. எனினும், இது விடயத்தில் இலங்கைத் தீவின் நீதிப் பரிபாலன நடைமுறைகளைப் பரிசோதிக்கும் விதத்திலும் வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்தும் விதத்திலும் தமிழ் வழக்கறிஞர்கள் சட்ட ரீதியிலான தமது நடவடிக்கைகளை ஒருபுறம் முன்னெடுக்கலாம்.
இவை இரண்டும் தாயகத்தில் தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டிய இருமுனைப் போராட்டங்களாகும். அதேசமயம் தாயகத்துக்கு வெளியே உலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும் தமிழகத்தையும் இணைத்து நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வெகுசன எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கலாம். அங்கேயும் உலகின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் புதிய படைப்பாற்றல் மிக்க போராட்ட வழிமுறைகள் குறித்துச் சிந்திக்கலாம்.
இவை இரண்டையும் தவிர மூன்றாவதாக ஒரு விடயத்தை தமிழ் மக்கள் செய்ய வேண்டி இருக்கிறது. அதுவும் உள்நாட்டில்தான். அது என்னவெனில், தமிழ் புலமையாளர்களுக்கு உரிய ஒரு பணி. தமிழ் புலமையாளர்களுக்கு இதுவிடயத்தில் குறைந்தபட்சம் அவர்களுடைய அறிவியல் ஒழுக்கம் சார்ந்த ஒரு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் இனம் சார்ந்து கருத்தைக் கூறவேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை. ஆனால், அவர்களுக்கேயான புலமை ஒழுக்கத்துக்கூடாக அவர்கள் உண்மைகளை நிரூபிக்க வேண்டும். இலங்கைத் தீவின் மதப் பல்வகைமை, மரபுரிமைப் பல்வகைமை போன்றவற்றை அவர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
தமிழ் பௌத்தம் எனப்படுவது தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்று கருத்து ஒரு பகுதி தமிழ்மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் அது இல்லை. தமிழ் பௌத்தம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு காலகட்ட வரலாற்று யதார்த்தம். அதை மாற்றி எழுத முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் பௌத்தம் ஒரு காலகட்டத்தில் பயிலப்பட்டிருக்கிறது. பின்னர் சைவசமயப் பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு பௌத்தம் பின்வாங்கியிருக்கிறது.
தமிழில் காப்பிய காலம் எனப்படுவது பௌத்த சமண காலகட்டம்தான். தமிழில் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்களும் ஒன்றில் சமண காப்பியங்கள் அல்லது பௌத்த காப்பியங்கள்தான். காப்பியச் செழிப்புக்கு அடிப்படையான சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டு வளர்ச்சி என்பது அக்கால கட்டங்களில்தான் உருவாகியது என்று பொருள். அது தமிழுக்கே செழிப்பு.
தமிழ் வரலாற்றில் அதை காப்பிய காலம் என்று தமிழர்கள் கொண்டாடிக்கொண்டு அதை நவீன அரசியலுக்கு எதிரானதாகத் திருப்புவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. அரசியல் அடிப்படையும் இல்லை. தமிழ் அடையாள உருவாக்கத்தில் பௌத்தத்திற்கும் ஒரு பங்குண்டு.
எனவே, தமிழ் பௌத்தத்தை தமிழ் தேசியத்துக்கு எதிராக கற்பனை செய்யத் தேவையில்லை. தேசியம் எனப்படுவது மதப் பல்வகைமையின்மீது மரபுரிமைப் பல்வகைமையின்மீது மக்களைத் திரளாக்குவதுதான். இதுவிடயத்தில் மதப் பல்வகைமை மரபுரிமைப் பல்வகைமை என்பவற்றை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். எனவே, தமிழ் பௌத்தம் இருந்தது என்பதனை குறித்து தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதேசமயம், பௌத்தத்தை ஓர் ஆக்கிரமிப்புக் கருவியாக பயன்படுத்தும் அரசியலைத்தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
பௌத்தத்தை, பௌத்த மரபுரிமைச் சொத்துக்களை ஆக்கிரமிப்பின் கருவியாக, மத மேலாண்மையின் கருவியாக தொல்லியல் துறையோ அல்லது வேறு எந்தத் திணைக்களமோ பயன்படுத்துவதைத்தான் தமிழ் புலமையாளர்கள் அம்பலப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் பண்பாட்டு வேர்களைக் குறித்தும் மதப் பல்வகைமை யதார்த்தத்தைக் குறித்தும் தமது ஆய்வு ஒழுக்கங்களூடாக உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டிய ஒரு பொறுப்பு தமிழ் கல்விமான்களுக்கும் அறிஞர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.
இது விடயத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை உட்பட நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தமிழ் அறிஞர்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?
மிகச்சில பலவீனமான குரல்களைத் தவிர இதை ஒரு புலமைப் பொறுப்பாக புலமைசார் கடமையாக புலமைச் சவாலாக எடுத்துக்கொண்டு தனது ஆராய்ச்சிகளின் மூலம் உண்மையை வெளியில் கொண்டுவர பெரும்பாலான தமிழ் புலமையாளர்கள் ஏன் முன்வரவில்லை?
இதுவிடயத்தில், சிங்களப் புலமையாளர்கள் ஆகிய கலாநிதி ஜூட் பெர்னாண்டோ, நீரா விக்ரமசிங்க, ஜெகத் வீரசூரிய போன்றோரின் துணிச்சலான முன்னுதாரணத்தை தமிழ் உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும். கடந்த மாதம் 21ஆம் திகதி இயற்கை எய்திய கலாநிதி மாலதி டி அல்விஸ் போன்றவர்களின் முன்மாதிரிகளைப் பின்பற்றவேண்டும்.
ஆராய்ச்சி முடிவுகளை இனம் சார்ந்து திரிக்கவோ அல்லது சிதைக்கவோ தேவையில்லை. அறிவியல் உண்மைகள் எப்பொழுதும் உண்மைகள்தான். பூமி தட்டையானது என்று திருச்சபை சொன்னதால் அது தட்டையாகி விடவில்லை. அது உருண்டையாக அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. கலிலியோவுக்கு முன்னும் அது உருண்டைதான். கலிலியோவுக்குப் பின்னும் அது உருண்டைதான். எனவே, தமிழறிஞர்கள் இது விடயத்தில் தமது அறிவியல் ஒழுக்கத்துக்கூடாக உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். இனம் சார்ந்துகூட சிந்திக்க வேண்டிய தேவை கிடையாது.
இப்படிப் பார்த்தால் நிகழும் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய ஒரு அறிவியல் பொறுப்பு தமிழ் புலமையாளர்களிற்கு உண்டு. தமிழ் வரலாற்று அறிஞர்களும் தொல்லியல் நிபுணர்களும் இப்பொறுப்பை உணர்ந்து தமது சமூகத்திற்குரிய தமது காலத்துக்குரிய கடமையைச் செய்ய முன்வரவேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் புதிய நாடாளுமன்றத்தின் தொடக்க உரைகளின்போது வரலாற்று உண்மைகளை முன்வைத்து உரை நிகழ்த்தினார். இதுவிடயத்தில், அவர் பெருமளவுக்கு தமிழில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் மூத்த வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளை முன்வைத்தே தமது உரைகளைத் தொகுத்திருந்தார்.
ஆனால், அவருடைய உரைகளை சகித்துக் கொள்ள முடியாத சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகள் அவருக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தபோது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைசார் தமிழ் புலமையாளர்கள் அறிஞர்கள் எவரும் வாய் திறக்கவில்லை. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் காணப்படும் வரலாற்று உண்மைகள் பெரும்பாலானவை ஆய்வு முடிவுகளே என்றும் அவை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வாளர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளே என்றும் கூறத்தக்க துணிச்சல் தமிழ் புலமையாளர்கள் எத்தனை பேரிடம் இருந்தது?
விக்னேஸ்வரன் தனது உரைகளில் வெளிப்படுத்திய வரலாற்று உண்மைகள் பெரும்பாலானவை அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று ஆசிரியர்களால் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆகும். ஆனால், சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அரசியல்வாதிகள் அந்த ஆய்வு முடிவுகளைக் கண்டு அச்சமடைந்தார்கள். அதாவது, உண்மையைக் கண்டு பயந்தார்கள். அந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் சிங்கள பௌத்த மேலாண்மைவாதம் அடிபட்டுப் போய்விடும் என்ற பயம் அவர்களுக்கு உண்டு.
அதைப்போலவே, தமிழ் பௌத்தம் குறித்தும் தமிழில் மதப் பல்வகைமை மரபுரிமை பல்வகைமை குறித்தும் ஆய்வு முடிவுகள் உள்ளதை உள்ளபடி கூறத் தமிழ் புலமையாளர்களும் தயங்குவதாகத் தெரிகிறது. அதைக் கூறினால் ஒருபுறம் தமது பதவி, தாம் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை இழக்க நேரிடலாம் என்ற அச்சம் இருக்கலாம். அல்லது தமிழ் தேசியவாதிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் குருட்டுத்தனமாக தமது கருத்துக்களை விளங்கிக் கொண்டு எதிர்க்கலாம் என்ற முன்னெச்சரிக்கையும் இருக்கலாம்.
ஆனால், அவரவர் அவரவருடைய அறிவியல் ஒழுக்கத்தின் பாற்பட்டு தமக்குரிய தொழில்சார் அறத்தையும் துணிச்சலையும் நிரூபிக்க வேண்டிய காலம் இது. அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் முதலாவதாக அவர்கள் தங்களுடைய அறிவியல் ஒழுக்கத்திலிருந்து தவறுகிறார்கள். இரண்டாவதாக அறிவியல் அறத்திலிருந்து தவறுகிறார்கள். மூன்றாவதாக தமது காலத்தில் தம் சமூகம் சார்ந்த தமக்குரிய அறிவியல் பொறுப்பிலிருந்தும் தவறுகிறார்கள்.