பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உலகளாவிய வாழ்க்கையிலிருந்து நம்மை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை விரும்பினால் போருக்குத் தயாராகுங்கள்’ என கூறினார்.
கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலவீனமடைந்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நட்பு நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியம், பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் விதிக்க வாய்ப்புள்ளது என மூன்று ஐரோப்பிய இராஜதந்திரிகள் தெரிவித்திருந்தனர். இதற்கு பிரான்சும் ஜேர்மனியும் தயாராகி வருகின்றன.
கடந்த வாரம் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.