இந்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் நிறுவனமான ‘இந்தியன் ஒயில் கொர்ப்பரேஷன்’, நாட்டில் அலுமினியம்- காற்று அமைப்புகளை தயாரிக்க, இஸ்ரேலின் தொடக்க நிறுவனமான ‘ஃபினெர்ஜி’ உடன் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் ஒயில் கொர்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘பசுமை இயக்கத்தை மேம்படுத்துவதற்காக எரிபொருள் செல்கள் மற்றும் உள்நாட்டு ஹைட்ரஜன் சேமிப்பக தீர்வுகளை உருவாக்க இரு நிறுவனங்களும் விரும்புகின்றன.
அந்தவகையில் இரு நிறுவனங்களும் ஒத்துழைப்புடன் இணைந்து, இந்தியாவின் இரண்டு முன்னணி வாகன உற்பத்தியாளர்களான மாருதி சுசுகி மற்றும் அசோக் லேலண்ட் ஆகியோர் ஊடாக புதிதாக இணைக்கப்பட்ட ஜே.வி நிறுவனமான ஐ.ஓ.சி.பினெர்ஜி லிமிடெட் நிறுவனத்துடன் அறிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளன.
அலுமினியம்- காற்று தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கு இந்தியன் ஒயில் கொர்ப்பரேஷன் மற்றும் ஃபினெர்ஜிக்கு இடையிலான ஜே.வி.தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் எரிசக்தி மாற்றத்திற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.
அலுமினியம்- காற்று தொழில்நுட்பம், வாகனங்களுக்கான தற்போதைய சவால்களில் பெரும்பாலானவற்றை சமாளிக்கவும் சாத்தியமான வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த செயற்பாடு, அதிக கொள்முதல் செலவு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வாக அமையுமென இந்தியன் ஒயில் கொர்ப்பரேஷன் தலைவர் எஸ்.எம்.வைத்யா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் எரிசக்தி தேவை மிக வேகமாக அதிகரிக்கும் என்பதுடன் மலிவான, இலகுவான மற்றும் அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட சேமிப்பு தொழில்நுட்பம்-பேட்டரிகளில் நாடு முன்னேற்றம் காணும் என இந்தியாவின் பெற்றோலிய மற்றும் எரிவாயு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.