இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையினால் அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் ஏதுவான வகையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அத்தோடு பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிக்கின்றோம்” என பதிவிடப்பட்டுள்ளது.