நாட்டில் தற்போது போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வரும் அபாயம் இருப்பதினால் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக 5,000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சிலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், ”எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் விசேடமாக பொதுமக்கள் மத்தியில் இந்த போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுப்பட்டுள்ளோர் இதனை மக்கள் மத்தியில் சாதூர்யமான முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடும். இவ்வாறான நாணயத்தாள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில், உண்மையான நாணயத்தாளா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பாரியளவில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுப்படுவோர் இதுதொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். 5,000 ரூபா நாணயத்தாள் உங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் அதன் உண்மையான அடையாளங்கள் மூலம் அதனை உறுதி செய்ய உங்களால் முடியும்.
நீங்கள் வியாபார நிலையம் ஒன்றை நடத்துவோராயின், இதுதொடர்பாக கூடுதலான கனவம் செலுத்த வேண்டும். எவரேனும் பணத்தை செலுத்தும் போது இதுதொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.