பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டுக்களை ஏற்க வேண்டாம் என ஹொங்கொங் அரசாங்கம் சில வெளிநாட்டு அரசாங்கங்களைக் கேட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வேலை செய்யும் குடிமக்களின் விடுமுறை விசாக்களுக்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தும் பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு 14 நாடுகளிடம் கூறியுள்ளது.
அதில், கடந்த ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாகக் கருதவில்லை எனவும், இதற்குப் பதிலாக ஹொங்கொங் கடவுச்சீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கடிதத்தைப் பார்த்த மூத்த மேற்கத்தேய தூதுவர் ஒருவர், பெரும்பாலான நாடுகள் ஹொங்கொங்கின் இந்தக் கோரிக்கையை புறக்கணிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எந்தவொரு நாட்டுக்கும் எந்த வெளிநாட்டுக் கடவுச்சீட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்ல ஹொங்கொங்கிற்கு உரிமையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஆட்சியின் கீழுள்ள ஹொங்கொங்கை விட்டு வெளியேற விரும்பும் ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு முழுக் குடியுரிமைக்கான அனுமதியை வழங்கும் வகையில் புதிய விசா திட்டத்தை பிரித்தானியா அறிமுகப்படுத்தியது.
ஹொங்கொங்கில் சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரித்தானியா தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமையை வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
1997ஆம் ஆண்டில் பிரித்தானியா ஹொங்கொங் நகரத்தை சீன ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக உருவாக்கப்பட்ட தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆவணத்தை ஏறக்குறைய மூன்று மில்லியன் ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், சீனாவின் பின்புலத்தில் ஹொங்கொங் அரசாங்கம் பிரித்தானியாவின் தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை முடக்கும் நடவடிக்கையைக் கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.