பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 164 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து அணி, பங்களாதேஸ் அணி வயிட் வோஷ் செய்துள்ளது.
வெலிங்டனில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கோன்வே 126 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், ருபெல் 3 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர், டஸ்கின் அஹமட் மற்றும் சௌமியா சர்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 319 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 42.4 ஓவர்கள் நிறைவில் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணி 164 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல்லா ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் மற்றும் முஷ்பிகுர் ரஹ்மான் ஆகியோர் தலா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் டேவோன் கோன்வே தெரிவுசெய்யப்பட்டார்.
அடுத்ததாக இரு அணிகளுக்கிடையிலான, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி ஹமில்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.