பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உப குழு அதன் அறிக்கையை இரண்டு மாதங்களில் ஆலோசனைக் குழுவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.
அதேநேரம், இந்த உப குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நியமிப்பதற்குக் குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளனர்.
பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிப்பது குறித்து ஆராயும் நோக்கில் கல்வி அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன இணைந்த அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் இந்த உபகுழு நியமிக்கப்பட்டிருந்தது.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் குழுச் செயற்பாடுகளை ஊடகங்களுக்கு வழங்க அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அத்தகைய பொதுமக்களின் கருத்துக்களை உள்ளடக்கும் வகையில் எளிதான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு உதவவும், அறிக்கையைத் தயாரிப்பதற்கும் கல்வி அமைச்சு, கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், நீதி அமைச்சு, சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மற்றுமொரு பாடமாக அல்லாமல், அதை முறையாக பாடத்திட்டத்தில் சேர்க்கவும், பாடசாலை மாணவர்களுக்கு சட்டத்தைக் கற்பிப்பதில் ஏனைய நாடுகளின் அனுபவங்களை ஆராயவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், உபகுழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், சிவஞானம் சிறிதரன், வீரசுமன வீரசிங்ஹ, சாகர காரியவசம், அமரகீர்த்தி அத்துகோரல, டயனா கமகே, மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய ஆகியோரும் தேசிய கல்வி நிறுவகம், நீதி அமைச்சு மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.