பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 66 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.
ஹமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி டெவன் கொன்வேயின் அதிரடி ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரமே இழந்து 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக டெவன் கொன்வே 92 ஓட்டங்களையும் வில் யங் 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக நசும் அஹமட் 2 விக்கெட்களை வீழ்த்த மகடி ஹசன் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
இதனை அடுத்து 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி என்ற அடிப்படையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன் முலம் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 1-0 என கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய இஷ் சோதி 4 விக்கெட்களையும் லொக்கி பெர்குசன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டெவன் கொன்வே தெரிவு செய்யப்பட்டார்.