மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளன
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும் இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசேட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டது.
மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் வரையில், தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறித்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாணவர்களை பாடசாலை சூழலுக்கு பழக்கப்படுத்துவதோடு, அவர்களது உளவியல் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களை பரீட்சைகள் அல்லது போட்டிகளுக்கு வழிநடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகளையும் இன்று ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள முன்பள்ளிகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.