அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், பொதுஜன பெரமுனவினால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது குறைவடைந்து வருகின்றது.
அதாவது மக்கள் தற்போது, அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிட ஆரம்பித்துள்ளனர். இவை தொடருமாக இருந்தால், பொதுஜன பெரமுன அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலைமை ஏற்படும்.
மேலும் மக்களினால் ஆட்சிக்கு வந்த நாம், இன்று அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோமா? அத்துடன் மக்களிடையே தற்போது சில பிரச்சினைகளும் குறைகளும் உள்ளன. எங்களுக்கு அது புரியவில்லை என்றால், நாங்கள் மேலும் கீழ்நோக்கி செல்வோம்.
இதேவேளை அடுத்த தேர்தல்களிலும் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
எங்களிடையே ஒற்றுமை இல்லாதிருந்தால், கடந்த தேர்தல் எளிதாக இருந்திருக்காது. நாங்கள் எவ்வாறு ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டால், அடுத்த தேர்தலில் நாம் வெல்ல முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.