ஹந்தானை, ஊராகளை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதாகம்மான தனி வீட்டு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய அரசு பாராமுகமாக செயற்படுகின்றது. என ஜனநாயக மக்கள் முன்னணியின் பஹத்த ஹேவாஹெட பிரதேச சபை உறுப்பினர் கணேசன் பெரியசாமி தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி காலத்தில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்களால் உதாகம்மான தனி வீட்டுத்திட்டம் கண்டி மாவட்டத்தின் தோட்ட பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்ட்டது. அதில் ஹந்தானை தோட்டத்தில் மூன்று உதாகம்மான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கபப்ட்டது.
ஊராகளை பகுதியில் 22 வீடுகளை உள்ளடக்கிய திட்டமும், ஹந்தானை ஒன்று, இரண்டு என 10 வீடுகள் மற்றும் 18 வீடுகளை கொண்ட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பயனளிக்கும் ரூபா 5 லட்சம் உதவி தொகையாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டது.
எனவே இத்திட்டத்திற்கான மொத்த கொடுப்பனவு 25 மில்லியன் ஆகும். அதிலே 18.35 மில்லியன் நல்லாட்சி காலத்தில் செலுத்தப்பட்டது. எனினும் இவ்வீடுகளை பூரணப்படுத்துவதற்கான எஞ்சிய தொகை 2019 ஜனாதிபதி தேர்தலில் இருந்து இன்றுவரை செலுத்தப்படவில்லை.
எமது நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் நாடாளுமன்றத்தில் பல முறை இது தொடர்பாக வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்வதாக இல்லை. எமது மக்களின் வேலை திட்டங்களை பராபட்சமாக அரசு நிராகரித்து வருகின்றது.
அரசில் உள்ள மலையக பிரதிநிதிகள் எதுவும் செய்வதாக இல்லை. புதிய வீடுகளை கட்ட முடியாவிட்டாலும் ஆரம்பித்த வீடுகளை முழுமையடுத்துவதற்க்காவது நடவடிக்கை எடுக்கலாமே.