மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை கறுப்புக் கொடிகள் கட்டி துக்க தினம் கடைப்பிடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைவாக, கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி கட்டி துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், வரும் திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி நகரில் உள்ள பசுமைப் பூங்காவில் விசேட அஞ்சலிக் கூட்டமும், நினைகூரல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நேரத்தில் வர்த்தக நிலையங்களை மூடி அஞ்சலி செலுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக் குரலாகவும், தமிழ் மக்களின் துன்ப துயரங்களுக்காகக் குரல் கொடுத்து வந்த ஆண்டகையை மனதில் நிறுத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தவும், அவரை நினைவுகூரவும் வேண்டிய கடப்பாடு அனைத்து தமிழ் மக்களிடமும் உள்ளது.
இந்நிலையில், அடுத்துவரும் நாட்கள் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் முக்கியமான நாட்கள் என்ற வகையில் எதிர்வரும் திங்கட்கிழமையன்று ஆண்டகைக்கு அஞ்சலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.