மன்னாரில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நல்லடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் தெரிவிக்கையில்,
“இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நல்லடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினத்தைத் துக்க நாளாக அனுஸ்ஷ்டிக்குமாறு பல்வேறு தரப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் திங்களன்று நிறுத்தப்படவுள்ளன. அத்துடன், உள்ளூர் சேவைகளும் அன்றைய தினம் இடம்பெறாது.
வட மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் இருந்தும் மன்னாருக்கான தனியார் சேவைகள் அன்றைய தினம் இடம்பெறாது.
மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கப் பிரதிநிதிகளும் ஆயரின் துயரில் பங்கு கொள்வதோடு முழுமையாக துக்க நாளை அனுஷ்டிப்போம்.
அன்றைய தினம் இறுதி அஞ்சலிக்காக வருகின்ற மக்கள் மீண்டும் திரும்பிச்செல்வதற்கு, தேவை ஏற்படின் விசேட போக்குவரத்துச் சேவைகள் எம்மால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.