காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அதனை இரத்து செய்ய நேரிடும் எனவும் கூறினார்.
கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த அலுவலகத்தை தாம் நியமித்ததாக அவர் தெரிவித்தார்.
ஜனநாயக சமூகத்தில் தொடர்ந்தும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இருக்குமென தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் அன்று இடம்பெற்ற விடயங்கள் முற்றிலும் மாறுபட்டவையென்றும் யுத்தக்காலப் பகுதியென்பதால் நாளை என்பதே நம்பிக்கையற்ற நிலைமையாக அன்று இருந்ததாகவும் மக்கள் காணமாலாக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட விடயதானங்கள் பல இருந்தனவென்றும் அது நாட்டில் தொடருமாக இருந்தால் இதனை ஜனநாயக நாடென கூற முடியாதென்றும் தெரிவித்தார்.
எப்போதும் காணாமல்போனவர்கள் தொடர்வார்களாக இருந்தால் அதற்கு ஆணைக்குழுக்கள் அவசியம் என்றால் நாட்டில் வேறு பிரச்சினைகள் இருப்பதாகவே தோற்றப்பாடு வெளிப்படும் என்றும் ஆனால், அது அந்தப் பிரச்சினைக்கு மாத்திரமானதாகவே இருக்க வேண்டுமென தான் நினைப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.