கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது நாளாந்தம் அண்ணளவாக 200 நோயாளிகள் மட்டுமே அடையாளம் காணப்படுவதாக கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
இதேவேளை குறைந்துவரும் தொற்று வீதத்திற்கு இணையாக பி.சி.ஆர் பரிசோதனைகள் படிப்படியாக குறைக்கப்படுகின்றனவே அன்றி பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதனால் நோயாளிகளின் எண்னிக்கை குறையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் கடந்த வாரம் (03) வெளியிடப்பட்டன.
அதில் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, சில தனிமைப்படுத்தல் நடைமுறைகள் உட்பட, தளர்த்தப்பட்ட விதிமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை, ஆனால் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.