ஆப்கானிஸ்தான் -ஹெல்மண்ட் மாகாணத்தின், நஹ்ர் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் மீது தலிபான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நஹ்ர் சிராஜ் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு தளத்தை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, தலிபான் போராளிகள் தாக்கியுள்ளனர். இதில் குறைந்தது 20 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் எனவும் 14 பேர் காயமடைந்தனர் எனவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு மோதல்கள் நடந்திருப்பதை ஹெல்மண்ட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து மேலதிக விவரங்களை வழங்க மறுத்துவிட்டனர்.
தலிபான் செய்தித் தொடர்பாளர் யூசுப் அஹ்மதி, குறித்த குழு தளத்தைத் தாக்கி, நஹ்ர் சிராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய பாதுகாப்பு நிலையத்தில் பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என ருவிட் செய்துள்ளார்.
மேலும் ஹெல்மண்ட் மாகாணத்தின் நஹ்ர் சிராஜின் வஜீர்மாண்ட் பகுதியில், நேற்று இரவு மோதல்கள் நடந்ததாகவும் அஹ்மதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்க படையைச் சேர்ந்த 13பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 11 பேர் தலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கனரக ஆயுதங்களும் அந்தக் குழுவால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மிர் ரஹ்மான் ரஹ்மானி, எந்தவொரு பிரச்சினைக்கும் போரும் வன்முறையும் தீர்வுகள் அல்ல என குறிப்பிட்டுள்ளார். வோலேசி ஜிர்கா (நாடாளுமன்றத்தின் கீழ் சபை) கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் சபை மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையான சமாதான முன்னெடுப்புகளுக்கான திட்டத்தை வகுக்க உள்ளனர் எனவும் மிர் ரஹ்மான் ரஹ்மானி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சர்வதேச சமூகம், பிராந்தியம் மற்றும் அண்டை நாடுகள், முன்னரை விட தெளிவான ஒருமித்த கருத்துடன் இந்த முடிவுக்கு வந்துள்ளன. மக்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் சமாதானத்தை அடைய உதவுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நீடித்த மற்றும் கண்ணியமான அமைதிக்காக பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் துரிதப்படுத்தவும் மிகவும் தர்க்கரீதியான வழியை பின்பற்ற வேண்டும் என மிர் ரஹ்மான் ரஹ்மானி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மை, மக்களுக்கு சொந்தமானது என்றும் அது மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் மூலமாக செயற்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.