சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகுமென இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெளியாகும் தமிழ் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே முஹம்மது சாத் கட்டாக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து நாடுகளும் தங்களது எல்லைக்குள் பாதுகாப்பு, சமாதானம் ஆகியவற்றினை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மேலும் இவ்விடயங்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் மதிப்பளித்து செயற்பட வேண்டும்.
இதேவேளை அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார வளங்கள் ஆகியவகையே இலங்கையை உலக வல்லாதிக்க சக்திகள் இலக்கு வைப்பதற்கு முக்கிய காரணமாகும்.
அத்துடன் அனைத்து நாடுகளும் தங்களது நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் கலை மற்றும் கலாசார உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் சுதந்திரமாக பின்பற்றுவதற்கு அனுமதியளிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.