மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 614ஆக அதிகரித்துள்ளது.
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நேற்று இடம்பெற்ற போராட்டத்தின்போது பாகோ நகரில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் துப்பாக்கிச்சூட்டில் சுமாா் 10 போ் உயிரிழந்ததாக பாகோ நகர மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த நகரின் ‘தி பாகோ வீக்லி’ செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, இதுவரை இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கை 614ஆக உயா்ந்துள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 46 போ் சிறுவா்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அதேநேரம், போராட்டங்களில் ஈடுபட்டதாக இதுவரை 2 ஆயிரத்து 751 போ் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கலைத்தது.
அத்தோடு, அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியன்மாரில் நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.