ஈரானில் புதிதாக செயற்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்தி அமைப்பான ‘அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஒஃப் ஈரான்’இன் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமால்வண்டி தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் இருக்கும் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சார வசதி செயலிழந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருக்கும் புதிய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்த மறுநாள் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
எனினும், இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவோ, எந்த வித கசிவோ ஏற்படவில்லை என கமால்வண்டி தெரிவித்தார்.
இதேவேளை இந்த அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹியின், இது ஒரு தாக்குதல் எனவும் இது அணுசக்தி தீவிரவாதமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த இழிவான நடவடிக்கைகளை ஈரான் கண்டிக்கிறது. அதோடு இந்த அணுசக்தி தீவிரவாதம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது’ என தெரிவித்தார்.
இது இஸ்ரேலிய சைபர் தாக்குதலால் நடந்ததாக, புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறியதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை.
கடந்த ஜூலை மாதம் கூட, இதே நடான்ஸ் அணுசக்தி மையத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது.
அது மத்திய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளை ஒன்றாக இணைக்கும் பட்டறையை பாதித்தது. அது கூட ஒரு தாக்குதல் எனக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.