இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததும் உருமாறிய கொரோனாவும்தான் முக்கிய காரணங்கள் என ‘எய்ம்ஸ்’ இயக்குனர் வைத்தியர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
இந்த நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்துள்ள ‘எய்ம்ஸ்’ வைத்தியசாலையின் இயக்குனர் வைத்தியர் ரந்தீப் குலேரியா, கடந்த பெப்ரவரி மாதம், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியவுடன், மக்கள் கொரோனா செயலிழந்து விட்டதாக நினைத்து, விதிமுறைகளைப் பின்பற்ற தவறியதாகத் தெரிவித்துள்ளார்.
நோயை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் வெளியே போய் பார்த்தால், சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என எல்லாவற்றிலும் கூட்டமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவ்வாறான மக்களின் செயற்பாடுகளே தொற்று பெரிய அளவில் பரவ காரணமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுங்கள் என்றும் அலட்சியமாக செயற்பட்டால், இதுவரை கிடைத்த பலன்களையும் இழக்க நேரிடும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிலைமையை சரிசெய்யாவிட்டால், கொரோனா பரவல் விகிதம் நாட்டின் சுகாதார வசதிகள் மீது பெரும் கறையை உண்டாக்கி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அது கொரோனா வருவதை தடுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரோனா வந்தால் நோய் தீவிரம் அடைவதை தடுப்பதுடன், இறப்பு விகிதத்தை குறைக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.