இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த செய்தியில், “எமது முன்னோர்கள் தைத் திருநாள், சித்திரை வருடப் பிறப்பு, தீபாவளித் திருநாள் மற்றும் விசேட தினங்கள் அனைத்திலும் காலை எழுந்து ஸ்நானம் செய்து தூய ஆடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை இயற்றிய பின்னரே தமது நாளாந்தக் கடமைகளுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அதிலும் விசேடமாக ஆலய வழிபாடுகளை தமக்கு மட்டுமே உரித்தானதாகக் கொள்ளாமல் அனைத்து மக்களுக்கும் சுபீட்சம் உண்டாக வேண்டும் என பிரார்த்திக்கின்ற வழக்கத்தையும் கொண்டிருந்தனர்.
அதனால் அவர்களது வாழ்வு அமைதியும் சுபீட்சமும் அமைந்ததாக அமைந்தது. அவர்கள் பெரு வாழ்வு வாழ்ந்தார்கள். இன்று ஆலயம் தொழக் கூட நேரமற்ற நிலையில் நாம் பறந்து கொண்டிருக்கின்றோம்.
அதன் விளைவாக அமைதியற்ற மனநிலை, நோய் நொடிகள் விரைவாகப் பற்றிப் பிடிக்கின்ற தன்மை போன்றவை மேலோங்கியுள்ளன.
எனவே கிடைப்பதை வைத்து சிறப்பாக வாழப் பழகிக் கொண்டு இந்த இனிய புதிய வருடத்தில் நாம் அனைவரும் இறை பக்தி மிக்கவர்களாக அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களாக வாழப் பழகிக் கொள்வோம்.
அதற்கு சூழல் இடம் கொடுக்க வேண்டும். இறைவன் தான் அதை நல்க வேண்டும். பொருட்களின் விலைகளின் ஏற்றம் மலைப்பைத் தருகின்றது.
நாம் அனைவரும் முடியுமான அளவுக்கு வீட்டுத் தோட்டங்களை உருவாக்க இவ்வருடத்தில் முனைவோமாக! அனைவருக்கும் சுக ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்ட பிரார்த்தித்து என் செய்தியை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.