சிரியாவில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் மே 26ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வரும் திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் உள்ள சிரியர்களும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன் அவர்கள், மே 20ஆம் திகதி தூதரகங்களில் வாக்களிக்க முடியும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல், போர்ச் சூழலில் சிரியாவில் நடக்கவுள்ள இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் என்பதுடன் தற்போதைய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்காதபோதும் போட்டியிடும் பட்சத்தில் அவரே வெற்றிபெறுவார் என்று கருதப்படுகிறது.
கடந்த 2014 முதல் சிரியாவில் நடைபெற்றுவரும் பேரழிவுதரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் அசாத் 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
இதேவேளை, சிரியாவின் 2012 அரசியலமைப்பின் கீழ், ஒருவர் ஏழு ஆண்டுகள்படி இரு தடவை ஜனாதிபதியாக இருக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.