18 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது போக்குவரத்து சட்டத்தை மீறிய 6800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குடிபோதையில் வாகனம் செலுத்திய 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி மதியம் 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணிவரை மேற்கொள்ளப்பட்ட 18 மணிநேர சோதனை நடவடிக்கையிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளில் பெரும்பாலானோரே போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் கிட்டத்தட்ட 75 வீதம் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள்தான் காரணமாகும். ஆகவே இந்த வாகனங்களை செலுத்தும் சாரதிகள்விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.