கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவருக்கு அதே நிறுவனத்தை சேர்ந்த தடுப்பூசியே இரண்டாவதாக செலுத்தப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசியை கலந்து வழங்க முடியாது இருப்பினும் எதிர்காலத்தில் இந்த செயன்முறை மாறக்கூடும் என தாங்கள் நம்பவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
தற்போது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அளவுகள் இல்லாததால், சீன தயாரித்த சினோபோர்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸாக வழங்கப்படுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலில் பெற்றுக்கொண்டவருக்கு இரண்டாவது டோஸாக அதே தடுப்பூசியே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முதல் டோஸை வழங்கியதில் இருந்து 4 வாரங்களில் இரண்டாவது டோஸை வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியது.
இருப்பினும், தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை 95% அதிகரிக்க உதவும் என மற்றுமொரு ஆய்வு தெரிவிப்பதால் 14- 16 வாரங்களுக்கு பின்னர் செலுத்தப்படுகின்றது என சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.