முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஐ.பி.எல்.2021 இலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விலகியுள்ளார்.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் வீரரான இவர், இம்முறை ஐ.பி.எல்.லில் சன்ரைசஸ் விளையாடிய முதலிரு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தார். அதன்பின்னர், முழங்கால் உபாதை காரணமாக விளையாடும் பதினொருவரில் இடம்பெறாமல் ஓய்விலிருந்தார். அவருக்குப் பதிலாக கலீல் அஹமட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
சன்ரைசஸ் அணியின் தலைவர் டேவிட் வோர்னரிடம் நடராஜனின் காயம் பற்றிக் கேட்கப்பட்டபோது, ‘அவரது காயம் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஸ்கானிங் செய்யவேண்டும். அதற்கு அவர் தற்போதைய பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினால் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டே திரும்ப வேண்டியிருக்கும். அதுபற்றி சிந்தித்து வருகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அவ்வாறு குறிப்பிட்ட அடுத்த நாளிலேயே நடராஜன் தொடரிலிருந்து விலகுவதான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் அணியின் பந்து வீச்சில் யோக்கர்களை வீசியும், இறுதி ஓவர்களில் எதிரணித் துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தும் கவனமீர்த்தவர் நடராஜன். அதனால், அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைப் பயிற்சிப் பந்துவீச்சாளராக இணையும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அவுஸ்திரேலியாவில் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்துக் காயமடைய, ரி20, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், டெஸ்ட் போட்டி என்று மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்தது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நம்பிக்கையைப் பெற்றார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஒரே தொடரில் அறிமுகமான இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
அந்தத் தொடரின்போதே அவருக்கு முழங்கால் உபாதை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எந்தவித தகவலையும் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், இந்தியா திரும்பிய பின்னர் இந்தக் காயத்தினால் அவர் அவதியுறுவது குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருக்கு காயத்திலிருந்த மீள்வதற்கான சிகிச்சைகளும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதனால், இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
ஐ.பி.எல்.2021 தொடரிலிருந்து முழங்கால் உபாதை காரணமாக விலகியிருக்கும் நடராஜன் உடனடியாகவே சிகிச்சைகளை ஆரம்பித்திடுவார் என்று நம்பப்படுகிறது. நடராஜனின் இழப்பு சன்ரைசஸ் அணியைப் பாதிக்கும் என்றாலும் புவனேஷ்வர் குமார், கலீல் அஹமட், சித்தார்த் கௌல், சந்தீப் சர்மா, பசில் தம்பி, ஜேஸன் ஹோல்டர் போன்றோர் இருப்பதால் அவர்களால் ஓரளவுக்கு சமாளித்திட இயலும் என்று கருதப்படுகிறது.
தனது விலகல் குறித்து நடராஜன் உருக்கமாக தெரிவிக்கும் காணொலி ஒன்றை சன்ரைசஸ் அணி நிர்வாகம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
இந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியிருக்கும் சன்ரைசஸ் அணி, ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாமிடத்திலிருக்கிறது.