இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் இடைநிறுத்தியுள்ளது.
குறித்த இரு நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுகளின் கடுமையான நான்காவது அலைகளை ஈரான் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாங்கள் இப்போது இந்திய வைரஸ் என்ற புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம் எனவும் இது, ஆங்கிலம், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவை விட மோசமானது என்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி இன்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வைரஸ் நாட்டினுள் நுழைந்தால் தாங்கள் பெரிய சிக்கலை எதிர்கொள்வோம் என அவர் தேசிய கொரோனா வைரஸ் எதிர்ப்புப் பணிக்குழுவின் ஊடக மாநாட்டின்போது கூறியுள்ளார்.
ஈரானில், இதுவரை 23 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 69ஆயிரம் பேர் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.