மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவர்கள் இந்தோனேசிய தலைநகரில் இன்று (சனிக்கிழமை) மியன்மாரின் நெருக்கடி நிலைகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில், மியன்மாரில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியுள்ள இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங் பங்கேற்றார்.
இந்நிலையில், நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வன்முறைக்கு உடனடி முடிவு உட்பட, மியான்மரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஆசிய தலைவர்கள் ஐந்து விடயங்களில் ஒருமித்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.
அதில், மியன்மாருக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, அரசியல் கைதிகளை விடுவித்தல், பொதுமக்கள் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்துதல் மற்றும் மியான்மார் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு சிறப்பு ஆசியத் தூதுவரை நியமித்தல் என்பன உள்ளடங்குகின்றன.
இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், தான் உட்பட்ட ஆசியானின் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங் நிராகரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின் ஆங் ஹ்லேங் ஆசியான் தலைவர்களின் ஈடுபாட்டை எதிர்க்கவில்லை எனவும் ஆனால், இந்தச் செயன்முறைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றும் மின் ஆங் ஹேலிங்கிடமிருந்து உடனடிக் கருத்துக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசியான் கூட்டமானது மியான்மரில் ஏற்பட்ட நெருக்கடியைக் குறைப்பதற்கான முதலாவது ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சியாகும் என்பதுடன் மியான்மரில் ஒரு இராணுவ அரசாங்கத்தின் தலைவர் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசியானின் குறுக்கீடு இல்லாத கொள்கையானது சர்ச்சைக்குரிய சிக்கல்களைச் சமாளிப்பதற்குக் கடினம் என்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, சீனா மற்றும் அமெரிக்காவே மியன்மாரின் ஆட்சிக் குழுவை நேரடியாகச் சமாளிக்க சிறந்த தளம் என சர்வதேச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.